சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், " மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு பயனளிக்ககூடிய வகையில் இல்லை. இந்தச் சட்டம் இடைத்தரகர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் வியாபாரம் தரக்கூடிய வகையில் உள்ளது. விவசாயிகளை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் விலையை விவசாயிகள் தான் நிர்ணயிக்க வேண்டும். இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ நிர்ணயிக்க முடியாது. இது பெரிய அளவில் மார்க்கெட்டிங், பெரிய முதலாளிகளை பாதுகாக்கும் சட்டமாக இருப்பதால் தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
இந்தச் சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும். வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், "தமிழ்நாட்டில் 12 மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பு. நீட் தேர்வை எந்த மாநிலம் விரும்புகிறதோ அங்கு தேர்வு நடத்தலாம். எந்த மாநிலம் விரும்பவில்லையோ அங்கு விலக்கு அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 40 விழுக்காடு பாடத் திட்டங்கள் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்