சென்னை: தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள், ஆங்கிலம் ஆகியப் பாடங்களுக்கான தேர்வினை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. கரோனா தொற்றுக்கு பின்னர் நடைபெறும் தேர்வு என்பதாலும், தேர்வின் மீது மாணவர்களுக்கு உள்ள அச்சம், 11ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பாடத்தை 12ஆம் வகுப்பில் படிக்கும்போது, எழுதுவதற்கு அச்சம் போன்ற காரணங்கள் இதற்கு கூறப்படுகிறது. ஆனால், வழக்கத்தை விட அதிகளவில் மாணவர்கள் தேர்வினை எழுதாமல் இருந்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. மேலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை அனைத்து மாணவர்களும் எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
கல்வியை விட மற்றவைகளில் கவனம்: இந்த நிலையில் உளவியல் நிபுணர் அபிலாஷா (Dr.Abilasha, Psychologist) ஈடிவி பாரத்திற்கு நேற்று (மார்ச்.18) அளித்த சிறப்பு பேட்டியில், "12ஆம் வகுப்புபொதுத் தேர்வினை எழுதுவதற்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை எனவும், அவர்களில் 35 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்களும், 15 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்களும் என்ற தகவல் வெளியாகியுள்ளது என்றார்.
மேலும், "கரோனா தொற்றுக்கு பின்னர், இந்த மாற்றம் வந்ததற்கு முக்கிய காரணியாக மாணவர்கள் இயற்கையாகவே ஒழுக்கமற்ற நிலைக்கு சென்றுள்ளனர். இதனால், அவர்கள் உட்கார்ந்து படிப்பதோ, எழுதுவதோ போன்றவை குறைந்துள்ளன. பள்ளிகளுக்கும் அவர்களுக்கும் இடையேயான இடைவெளியால் மாணவர்களுக்கு தேர்வு பயம் வந்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதாமல் நேரடியாக 12ஆம் வகுப்பு எழுதுவதால் தேர்வு பயம் இருக்கிறது. கரோனா காலக் கட்டத்தில் பல்வேறு காரணங்களால் படிப்பை தொடராமல் இருந்து உள்ளனர்.
போதைப்பழக்கம் அதிகரிப்பு: அதே நேரத்தில், தற்போது மாணவர்களிடம் மது மற்றும் போதைப் பழக்கம் அதிகரிதுள்ளதும் இதற்கு காரணமாக இருக்கிறது. ஏற்கனவே, குடும்பப் பிரச்னை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவர்களால் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்கள் உயர்கல்விக்கும் செல்லமாட்டார்கள் என்பது தான் இங்கு வேதனையான ஒன்று" என்றார்.
பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?: "ஒட்டு மொத்தமாக கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்களின் தேவையை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டியது சமுதாயம், பெற்றோர்கள், அரசின் வேலையாகும். மன நல ஆலோசனைகளை முழுவதும் கல்வி அறிவும், பயிற்சியும் பெற்ற உளவியலாளர்கள் மூலம் அளிப்பது தான் சிறந்தது. ஆட்கள் பற்றாக்குறையால் கவுன்சிலிங் பயிற்சி அளித்து அனுப்புகின்றனர். சில உளவியலாளர்கள் இருக்கின்றனர். உறுதியாக மன ரீதியான பிரச்சனைகளை அணுகுவதற்கு மற்றவர்கள் சரியானவர்களாக இருக்க மாட்டார்கள். பாடத்திட்டம் குறித்து பிரச்சனைகளை தீர்க்க முடியும். தனியார் பள்ளி மாணவர்களும் தேர்விற்கு வரவில்லை.
அடுக்கடுக்காக பிரச்னைகளால் மனச் சருகலா?: அவர்களுக்கான பிரச்சனையும் கண்டுபிடிக்க வேண்டும். பொருளாதார ரீதியாகவோ, மன அழுத்தம் காரணமாக வரவில்லையா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மாணவிகளின் மனநிலையையும் ஆராய வேண்டும். அவர்களுக்கு கல்வி போதும் என இருக்கின்றனரா? அல்லது வீட்டில் திருமணம் செய்துத் தர உள்ளார்களா? என்பதையும் பார்க்க வேண்டும். இதனை சமூகப் பிரச்னையாகத்தான் பார்க்க வேண்டி உள்ளது. இதற்கு பின்னால் உளவியல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதனையும் கண்டுபிடிக்க வேண்டியது இருக்கும்.
பாடத்திட்டமே பாரம் ஆயினவா?: 10-ஆம் வகுப்பு மாணவர்களும் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்வினை எழுத உள்ளனர். அவர்களும் ஒழுக்கம் இல்லாமல் தேர்வினை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தெரியாமல் இருப்பார்கள். தேர்வினை முதலில் பார்க்கும்போது நிறைய அச்சம், பயம் இருக்கும். மேலும், மாணவர்கள் பாடத்திட்டம் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். 2 ஆண்டுகள் படிக்காமல் இருந்த மாணவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படிக்கும் போது அவர்களுக்கு அதுவே பயத்தை தரும்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாள் எளிதாக இருப்பது போல் வடிவமைத்தாள் அவர்கள் மற்றத் தேர்வினையும் விருப்பதுடன் வந்து எழுதுவார்கள். மாணவர்களுக்கு தேர்வு எதிரி கிடையாது. அவர்களுக்கு வரும் மதிப்பெண் தான் எதிரியாக இருக்கிறது. எனவே, நாங்கள் தற்பொழுது ஏன் எழுத வேண்டும். பின்னர் எழுதிக்கொள்கிறேன் என முன்னெச்சரிக்கையாக கூட நினைத்து இருக்கலாம்" என்று கூறினார்.
மேலும், "மாணவர்கள் இடையில் நிற்பதற்கான காரணத்தை படிப்பு சம்பந்தமாக முதலில் கண்டறிய வேண்டும். அதேபோல், சமூக ரீதியாக அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளையும் ஆராய வேண்டும். மாணவர்களின் மனது எதில் அலைப் பாய்கிறது. கெட்ட பழக்க வழக்கங்களால் அல்லது வேலைக்கு செல்வதால் கிடைக்கும் வருமானத்தாலா? என்பதையும் ஆராய வேண்டி உள்ளது. மாணவர்கள் சம்பாதித்து பொருட்களை வாங்கலாம் எனவும், இடையில் நின்ற மாணவர்கள் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு செல்கின்றனர். சிலர் அடியாட்கள் கும்பலில் சேர்ந்து விடுகின்றனர். இது போன்ற செயல்கள் சமூகத்தில் நடந்துக் கொண்டுத்தான் இருக்கிறது'. மேலும் 18 வயதிற்கும் குறைவாக உள்ள மாணவர்களை குற்றச் செயல்களுக்கும் ஈடுப்படுத்துகின்றனர். அவர்கள் சிறார் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என்பதையும் பயன்படுத்துகின்றனர்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் தேர்வு எளிதாக இருக்கும் எனவும், வினாத்தாள் எளிதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறுங்கள். நீங்கள் 2 ஆண்டுகள் கழித்து தேர்வினை எழுத உள்ளீர்கள் என்பது தெரியும். 10ஆம் வகுப்பு தேர்வினை மாணவர்கள் எழுதினால் தான் 12ஆம் வகுப்பிற்கு செல்வார்கள். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதும், ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதும் தான்.
அரசு செய்ய வேண்டியது: மாணவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது அரசு, பள்ளி, பெற்றோருக்கு தேவையில்லை. 15 வயது மாணவர்கள் 2 ஆண்டுகள் கழித்து தேர்வினை எழுதுவது சிரமமாக இருக்கும். எனவே, அவர்களுக்கு ஆறுதல்படுத்தி தேர்வு எளிதாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி எழுத வைக்க வேண்டியது அரசின் வேலையாகும்.
கரோனா தொற்றுக்கு பின்னர், மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் மூழ்கி அடிமையாகி உள்ளனர். மாணவர்களே யூடியூபராக மாறி பதிவேற்றம் செய்கின்றனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாபக சக்தியும் குறைந்துள்ளது என ஒரு ஆய்வில் கூறுகின்றனர். மாணவர்கள் நன்றாக படித்து வந்த மாணவர்களாலும் தற்பொழுது, படிக்க முடியவில்லை என உடல் அளவிலும் கூறுகின்றனர். அதனையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
18+ சமூக வலைதள செயல்பாட்டை தடுக்கவும்: சமூக வலைத்தளங்களை பொறுத்தவரையில், 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் யூடியூபர், பிளாக்கர் ஆவதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வரலாம். இவர்களும் குழந்தைத் தொழிலாளர் கணக்கில் தான் வருவார்கள். ஆகவே, அரசும் இதனை தடுக்கலாம். மாணவர்கள் காசு, பிரபலத்திற்காக இதனை செய்யும்போது அவர்களும் ஒழுக்கம், கட்டுப்பாடு, எதிர்காலத் திட்டம் போன்றவற்றில் இருந்து விலகி செல்கின்றனர். எனவே, அதனையும் விதிமுறையாக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
தற்போது, பள்ளிகளில் மாணவர்களிடம் கோபம், வன்மம், வக்ரம், வெறி எல்லாம் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக்காரணம், அவர்களால் இயலாமை என்ற எண்ணம் தான். மேலும், சினிமாவில் கதாநாயகர் செய்வதை பார்த்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாணவ சமுதாயத்தில் எழுந்துள்ளது. மாணவர்களுக்கு எது சரியானது? என யாரும் கூறுவது இல்லை. பெற்றோர்கள் வேலைக்கு செல்லும்போது, குழந்தைகள் கேட்பதை வாங்கித் தந்து விட்டு, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கருதுகின்றனர். மாணவர்கள் முடியாது என கூறும்போதுத் தான் அதனை பார்க்கின்றனர்.
யூடியூப் சேனலிற்கும் சென்சார் தேவை: மாணவர்கள் அடிப்பதையும், கெட்ட வார்த்தை பேசுவதையும் ஹீரோயிசம் என நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆரம்ப வார்த்தையை ரொம்ப கேவலமான வார்த்தையாக சொன்னால் செலபிரிட்டியாக பார்ப்பார்கள் என போலியாக நினைக்கின்றனர். யூடியூப் சேனலில் வருவதைப் பார்த்துக் கெட்டு விடுகின்றனர். எனவே, அதற்கும் சென்சார் தேவைப்படுகிறது.
பெரும்பாலான மாணவர்கள் பெற்றோரை மதிப்பது இல்லை. ஒழுக்கமாக இருப்பது இல்லை. கட்டுப்பாடாக இருப்பதில்லை. பள்ளியில் குழந்தையை கேலி கிண்டல் செய்யும்போது, ஒரு மாணவர் மட்டுமே அந்த சூழ்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு ஆலோசனைகள் வேண்டும் எனக் கேட்கின்றனர். மாணவர்கள் செய்யும் தவறுக்கு சமூகம் தான் காரணம்.
மாணவர்களை, படிப்பு படிப்பு என்ற ஒரு விஷயத்தை அறிவு சார்ந்து மட்டும் கூறாமல், பல விஷயங்களைக் கூற வேண்டும். அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு நமது உணர்வை சரியாக அளிப்பது அவசியமான ஒன்றாகும். மற்றவர்களுடன் சமூகத்தில் எவ்வாறு பழகுவது, வாழ்வது, ஒரு பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்வது மற்றும் மற்றவர்களை எப்படி காப்பாற்றுவது போன்றவற்றை நாம் கூறுவது கிடையாது. எல்லோரும் படியுங்கள் என மட்டுமே கூறுகின்றோம். அவர்களை பிற்காலத்தில் சமூகத்தில் வாழ்வதற்கு மனிதராக மாற்றுமா? என்பதை பார்ப்பதில்லை. எனவே, தான் நாம் உளவியல் ரீதியாகவும் கூற வேண்டும் என நான் கூறி வருகிறேன்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை வந்தடைந்த மேஜர் ஜெயந்த் உடல்; தேனியில் இன்று காலை நல்லடக்கம்!