சென்னை: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையிலான குழுவினர், இன்று (பிப்ரவரி 12) உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம், விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுக்க சென்னை தலைமைச் செயலகம் வந்தனர்.
ஆனால், அங்கு அலுவலர்கள் இல்லாததால் அய்யாகண்ணு தலைமையில் வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். அப்போது, செய்தியாளரிடம் பேசிய அய்யாகண்ணு, “நெல், கரும்புக்கு கொள்முதல் விலையை இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இதுவரை நிறைவேற்றவில்லை, நதிகளை இணைப்பதாக அறிவித்தார், ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர். பயிர்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அனைகட்ட அனுமதி கொடுக்க கூடாது, கோதாவரி - காவிரி இணைப்புக்கு நிதி வழங்கும் வரை டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். சென்னையில் இருந்து 200 பேர் டெல்லி சென்று கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் செய்யவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மதக்கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்ட திமுக!'