மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை கண்டித்து தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய அளவில் மாணவர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வினை உடனடியாக ரத்து செய்ய கண்டித்து இன்று (ஆக.27) சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கைலாஸ் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பானி, நீதா அம்பானி போன்றவர்களின் புகைப்பட பதாகைகளை ஏந்தி பிரதமர் மோடி மக்கள் பேச்சை கேட்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஏதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
கிழக்கு மாவட்ட இளைஞர் அணி காங்கிரசை சேர்ந்த சாதிக் பேசியபோது, 'நீட் மற்றும் ஜேஇஇ தேர்வினை ரத்து செய்யாததால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 லட்சம் மாணவர்கள் உயிருடன் விளையாடுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!