சென்னை: போரூரை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை போரூரை அடுத்த வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட 6ஆவது வார்டு ஜெயராம் நகரில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (ஆக.26) நோயாளிகள் படுக்கையில் படுத்திருப்பது போன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பூங்கோதை கூறுகையில், "குடியிருப்பு மத்தியில் குப்பை கிடங்கு அமைப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. 15க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: நீலகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டம்!