சென்னை மாநகராட்சியில், சொத்து வரி வசூலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், குடியிருப்புகளுக்கு அதிக வரியும், வணிக கட்டடங்களுக்கு குறைந்த வரியும் வசூலிப்பதாகவும் கூறி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரே மாதிரியாக சொத்து வரி வசூல் விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, கடந்த 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடிவெடுத்தது ஏன்? எனவும், விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 1998ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்து வரி மூலம் எவ்வளவு வசூலிக்கப்பட்டது?
2018ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்படும் முன் ஆண்டுக்கு எவ்வளவு வரி வசூல் இருந்தது?
2018ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட பின், எவ்வளவு வரி வசூலிக்கப்பட்டது?
சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்தது ஏன்?
சென்னையில் மொத்தம் எத்தனை மால்கள், ஐ.டி. நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன? அக்கட்டிடங்களுக்கு எவ்வளவு சொத்து வரி விதிக்கப்பட்டது? எவ்வளவு வசூலிக்கப்பட்டது?
வணிக வளாகங்களுக்கு குறைந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக எத்தனை வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன? உள்ளிட்ட கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.