தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
பேரிடர் மேலாண்மை சட்டப்படி, இதுபோன்ற பேரிடர் காலங்களில் கல்விக் கட்டணம் தொடர்பாக அரசு அரசாணை பிறப்பித்தாலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டுவர தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாகக்கூறி, கோவையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 2) நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரிடர் மேலாண்மை சட்டப்படி கொண்டு வரப்பட்ட இந்த அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, தமிழ்நாடு அரசு எந்த புகார் எண்களையும் அறிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அரசாணையை மீறிய கல்வி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் அரசு வெளியிடவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஏற்கனவே வேறொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் சார்பில், தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்ட மனு பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 70 விழுக்காடு கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் முடிவு என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:‘தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள்’