சென்னை: 'தொடக்கக்கல்வித்துறையில் 2023-24ஆம் கல்வியாண்டில் பணி ஒய்வு பெற உள்ள 1,892 ஆசிரியர்களின் ஒய்வூதியப் பலன்களை பெறுவதற்கான கருத்துருக்களை தயார் செய்து மாநிலக் கணக்காயருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்' என தொடக்கக்கல்வித்துறை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற நாளுக்கு பின்னர், ஒருவார காலத்திற்குள் முறையாக, அரசுப் புள்ளி விவர மைய ஆணைய அலுவலருக்கு எந்தவித காலதாமதமும் இன்றி அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வித்துறையிலிருந்து ஓய்வுப் பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குவது காலதாமதாமகிறது என்றும் ஒருசில ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு மேலாக பொது வைப்பு நிதி முதிர்வு தொகைக்கான கருத்துரு சார் அலுவலங்களிலிருந்து அனுப்புவது காலதாமதம் ஆகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணப்பயன்கள் கால தாமதமின்றி உடனுக்குடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், அனைத்து ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-ல் தெரிவித்துள்ளவாறு ஒருவர் ஓய்வு பெறும் நாளுக்கு ஆறு மாதத்திற்குள் பொது வைப்பு நிதி முதிர்வு தொகை உட்பட ஓய்வூதியக் கருத்துருவினை தயார் செய்து மாநிலக் கணக்காயருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற நாளுக்கு பின்னர், ஒருவார காலத்திற்குள் முறையாக அரசுப் புள்ளி விவர மைய ஆணைய அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதில் எந்தவித காலதாமதமும் செய்யக்கூடாது. மாநிலக் கணக்காயர் அனுமதிக்க வேண்டிய இனங்கள் தவிர ஓய்வூதியப் பணப்பயன்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வுப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.
மாநிலக் கணக்காயருக்கு, ஓய்வும் பெறும் ஆசிரியர், ஊழியரின் பணிப்பதிவேடுகள் அனுப்பி வைக்கும் முன்னர், உரிய பதிவுகள் அனைத்தும் விடுபடாமல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பதை ஆராய்ந்து சரிபார்த்து மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மாநிலக் கணக்காயரிடமிருந்து தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு கருத்துக்கள் திருப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். வாரிசு நியமனங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்ந்து சரிபார்த்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் கல்வித்துறையில் இருந்து பெறப்பட்ட விபரங்களின் படி, 1892 தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் ஓய்வுப் பெற பெற்றுள்ளது. அதன்படி இவ்வாசிரியர்கள் அனைவருக்கும் முழுமையாக ஓய்வூதியக் கருத்துக்கள் அரசு விதிப்படி ஆறு மாத காலத்திற்குள் மாநில கணக்காயர் அரசு புள்ளி விவர மைய அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்.
மேலும், நீதிமன்ற வழக்குகள் துறை சார் நடவடிக்கை தணிக்கைத் தடை மூலம் ஓய்வுப் பெற அனுமதி அளிக்கப்படாத ஆசிரியர்கள், ஊழியர்கள் விவரம் ஏதேனும் இருப்பின், இயக்ககத்திற்கு உடனே தெரிவிக்கப்பட வேண்டும்.
ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மாநில கணக்காயர், அரசுப் புள்ளி விவர மைய அலுவலர் அவர்களால் ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்ட பின்னர், பணப்பயன்கள் முழுவதும் வழங்க முடியாத நிலையிருப்பின், அது சார்ந்த விவரங்களும் உரிய காரணத்துடன் இயக்ககத்திற்கு அந்தந்த மாத இறுதியில் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஓய்வுப் பெறும் அனைத்து வகை ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் உரிய காலத்திற்குள் பெற்று வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிப்பதுடன் ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்திற்குள் பெறப்படவில்லை என்ற கோரிக்கை ஓய்வூதியதார்களிடம் இருந்து பெறுவது வருங்காலங்களில் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் சேர புதிதாக விண்ணப்பிக்கலாம்!