சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தேசிய திறன் பயிற்சி நிலையத்தில் உள்ள கரோனா பாதித்த நபர்களுக்கான உடற்பயிற்சி மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (ஏப்ரல்.23) பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. மே மாதம் உச்சத்தை தொடும் என பலரும் கூறுகின்றனர். கரோனா பரவலை குறைக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினமும் சென்னையில் 3,500 முதல் 4,000 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கரோனா தொற்று அறிகுறி அதிகமாக இருந்தால் மட்டும் பெரிய அரசு மருத்துவமனைக்கு மக்கள் செல்ல வேண்டும். இல்லையென்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். ஆனால் அவர்கள் கரோனா பரிசோதனை செய்யும் மையத்திற்கு வர வேண்டும்.
கரோனா பரிசோதனையில் மக்களுக்கு தொற்று இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா? அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா? என்பதை மருத்துவர்கள் முடிவு எடுப்பார்கள். சென்னையில் நேற்று (ஏப்ரல்.22) கிட்டத்தட்ட 1,000 நபர்கள் கரோனா பரிசோதனை மையத்துக்கு வந்தனர்.
சொந்த வாகனங்களில்கூட கரோனா பரிசோதனை மையத்துக்கு மக்கள் வரலாம். வரும் 35 நாள்கள் கடினமாக இருக்கும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உள்ளவர்களும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கரோனா பரிசோதனையை 25 ஆயிரமாக உயர்த்துவதே மாநகராட்சியின் நோக்கம். சென்னையை பொறுத்தவரையிலும் கோவாக்சின் 10,658 கோவிஷீல்ட் 7,000 என இருப்பில் உள்ளது. இன்று (ஏப்ரல்.23) 3 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. திருமணம், இறப்பு, மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 30 இடங்களில் நிரந்தர கரோனா பரிசோதனை நிலையம் - ஆணையர் பிரகாஷ்