சென்னை: ஆவடியில் உள்ள எஸ்.எம் நகரில் காவல் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த சுமார் 2,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 6 முதல் 12 வரை 7 பிளாக்கில் தலைமை காவலருக்கு என்று தனியாக 500 வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு பிளாக்கும் 10 அடுக்குகள் கொண்டது. இந்த வீடுகளில் குடியேறிய தலைமை காவலர்கள் தனித்தனியாக தங்கள் குடியிருப்புகளுக்கு மின்வாரிய தொகையை செலுத்தி வருகின்றனர்.
அந்த குடியிருப்புகளுக்கு தேவையான வளாக விளக்கு மற்றும் மின்தூக்கி, குடிநீர் மோட்டார் போன்றவைகளுக்கு தமிழ்நாடு காவல் குடியிருப்பு வாரியம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் குடியிருப்பு வாரியம் கடந்த மாதம் செலுத்த வேண்டிய 2,80,000 ரூபாயை செலுத்தாததால், எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று (டிசம்பர் 26) திடீரென உள்ளே வந்த ஆவடி மின்சார வாரிய அதிகாரிகள், அந்த வளாகத்தின் பொது மின் இணைப்பின் பியூஸ் கேரியர்களை பிடுங்கி சென்றுள்ளனர்.
இதனால் லிஃப்ட், வளாக மின்விளக்கு, குடிநீர் மோட்டார் என அனைத்தும் தற்போது செயல்படாத நிலை ஏற்பட்டது. இதனால் 500 குடியிருப்பு வாசிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பள்ளி விடுமுறை நாள் என்பதால் வீட்டில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள் லிப்டை பயன்படுத்த முடியாமல், அத்தியாவசிய தேவைகளுக்கு கடைக்குச் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வீட்டைவிட்டு வெளியேறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து, குடியிருப்பு வாசிகள் கலைந்து சென்றனர்.
முதற்கட்டமாக ஆவடி மின்சார வாரியத்தினர் ஒருவாரம் அவகாசம் வழங்கி, 6 மணி நேரம் கழித்து மீண்டும் மின் சேவை வழங்கினர். இந்த அவாகாசத்திற்குள் குடியிருக்கும் காவல்துறை குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு மின் கட்டணம் செலுத்துவது குறித்து முடிவு எட்டப்படும் என ஆவடி காவல் ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு; யானை பசிக்கு சோளப்பொறி போன்றது - ஜெயக்குமார் விமர்சனம்