சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை உச்சம் தொட்ட நிலையில், தனியார் திருமண மண்டபங்களில், மருத்துவ படுக்கை வசதிகளை ஏற்படுத்தி அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி உள்ள தனியார் மண்டபத்தை 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது. இங்கு முதியோர்களை கீழ் தளத்திலும், இளைஞர்களை மேல் தளத்திலும் வைத்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பூவிருந்தவல்லி திமுக எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், ’கரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்' என்று இருகரம் கூப்பி வலியுறுத்தினார்.
பின்னர், பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கி அங்கு கள நிலவரம் குறித்த ஆய்வு செய்தார்.
திமுக எம்.எல்.ஏ ஆய்வின் போது அவருடன் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பூவிருந்தவல்லி நகர செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைவு - பால்வளத் துறை அமைச்சர் நாசர்!