திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், ' குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுக அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது. பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக. ஈழப்போரின்போது தமிழர்களுக்குத் துரோகம் செய்து காங்கிரஸ் கட்சியுடன் கைகுலுக்கி நின்றது திமுக.
இலங்கையில் இருந்துவரும் தமிழர்களை அகதி என்று சொல்வதே வேதனையாக இருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்கள் குடியேறிவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். இலங்கையில் தமிழர்கள் கோலோச்ச வேண்டும்.
இங்குள்ள அரசியல்வாதிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக இலங்கைத் தமிழர்களை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரம் தொடர்பாக கருத்து கூற பாஜக உட்பட எந்த கட்சிக்கும் உரிமை கிடையாது. அந்த முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும். மாணவர்கள் திமுகவின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் அப்பா, தாத்தாவை ஏமாற்றியவர்கள் உங்களையும் ஏமாற்ற நினைக்கிறார்கள்.
குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுகவின் பகல் வேஷம், நீலிக் கண்ணீரை கண்டித்து வரும் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்றார்.
இதையும் படிங்க: