பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மைகளைக் கண்டறிய ஓர் உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாடு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த சாந்த குமாரி உள்ளிட்ட 10 பேர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. தொடர்ந்து இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் இடைக்காலக் குற்றபத்திரிகையை கடந்த மே மாதம் 23ஆம் தேதி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும் இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் நடைபெற்றுவருவதாகவும் தற்போது சிபிஐ தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் இடைக்காலக் குற்றப்பத்திரிகையை சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் நவம்பர் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: