ETV Bharat / state

மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்! - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

N.Sankaraiah: உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 1:23 PM IST

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா இன்று (நவ.15) காலை 9.30 மணியளவில் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் குரேம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் சென்று, அதன் பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது.

மேலும் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதளப்பக்கத்தில், "சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி சங்கரய்யாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை அவரது சமூக வலைத்தளப் பக்கததில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், தகைசால் தமிழர் தியாகி என்.சங்கரய்யா மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன். விடுதலை போராட்ட வீரர், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவர் உள்ளிட்ட பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான சங்கரய்யா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் மக்கள் பணியை சிறப்பாக ஆற்றி உள்ளார்.

சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது, 'வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு!' என்று இவர் பேசியது அன்றைய தினம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பொதுவுடைமை இயக்கத்தின் தமிழ் நாளிதழான 'ஜனசக்தி' நாளிதழின் முதல் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் 'தீக்கதிர்' நாளிதழின் முதல் ஆசிரியராகவும் பணியாற்றிவர்.

இவர் ஆசிரியராக இருந்தபோது பொதுவுடைமைச் சித்தாந்தங்களைத் தனது எழுத்தின் மூலம் மக்களிடம் சென்றடையச் செய்தார். அன்னாரின் இழப்பு அவர் சார்ந்த கட்சிக்கும் மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சமூக வலைதளப் பக்கத்தில், "தான் கொண்ட கொள்கையில் இறுதி மூச்சு வரை போராடியவர், சுதந்திர போராட்ட தியாகி ஐயா சங்கரய்யா மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சமூக வலைதளப்பக்கத்தில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர்.

எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். சங்கரய்யா மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில், தமிழகத்தின் மூத்த தலைவரும், முதுபெரும் தலைவருமான 'தகைசால் தமிழர்' தோழர் சங்கரய்யா(102) மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல்லாண்டுகள் சிறையில் வாடியவர். தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் வளர்வதற்கு பெரிதும் பங்களிப்பு செய்தவர். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கங்களுக்கும், உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். தோழர் சங்கரய்யா அவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன் நாட்டின் விடுதலைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீட்சிக்கும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்பி அவரது சமூக வலைதளப்பக்கத்தில், "கொள்கை உறுதி, கொடுங்கோன்மை எதிர்ப்பு, மங்காத உழைப்பு, மழுங்காத சினம், காலமெல்லாம் கர்ஜித்த சிம்மக் குரல், வார்த்தையில் தெறித்தது வாளின் ஒளி!.. தியாகமும் சேவையும் அடியெடுத்துத்தர அன்னைத்தமிழ் வார்த்தெடுத்த அறம்சார் அரசியலின் அடையாளம், தோழர் சங்கரய்யாவுக்கு வீர வணக்கம்" என பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவரது சமூக வலைதளப்பக்கத்தில், நூறாண்டு தாண்டிய தன் வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார்.

சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான். பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி" என பதிவிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது சமூக வலைதளப்பக்கத்தில், "சுதந்திர போராட்ட வீரரும், இடது சாரி இயக்கத்தின் அடையாளமுமான சங்கரய்யா மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இடதுசாரி தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் மாணவராக, கட்சித் தலைவராக, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக, விவசாய சங்க தலைவராக தன் இறுதிக்காலம் வரை சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய சங்கரய்யா ஆற்றிய மக்கள் பணிகளும், மகத்தான தியாகமும் என்றென்றும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்" என பதிவிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது சமூக வலைதளப்பக்கத்தில், "முதுபெரும் அரசியல் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான சங்கரய்யா காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். மூத்த தலைவரான சங்கரய்யா மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பு. சங்கரய்யாவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, "மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா சுந்தரப் போராட்ட தியாகி, மக்களோடு மக்களாக பழகுகிற எளிய மனிதர், அரசியலில் நேர்மை, தூய்மை, தேசப்பற்றோடு வாழ்ந்து காட்டியவர், சாமானிய மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். எளிமையின் மறுவடிவுமான சங்கரய்யா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.