சென்னை: அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் நேற்று (டிச.6) அனுசரிக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் காவி சட்டை அணிந்த அம்பேத்கரின் படம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் காவிய தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
அதன் தொடர்ச்சியாக நேற்று அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் அர்ஜூன் சம்பத் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டு அர்ஜூன் சம்பத் மீது செருப்பு, பாட்டில், கற்களை வீசினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அர்ஜூன் சம்பத்தை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீசார் கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் அடைத்து பின்பு விடுவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வன்னியரசு உட்பட 20 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கேட்காமல் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அர்ஜூன் சம்பத் மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு காவி துண்டு அணிவித்து போராட்டம் நடத்தப்படும் என்ற செய்தி சமூக வலைதளத்தில் பரவியது.
சென்னை முழுவதும் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இன்று (டிச. 7) பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அண்ணாசாலை, அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதார் பதிவு - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!