சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே உள்ள செம்பரம்பாக்கத்தில் உள்ள ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
ஏரியின் முழு கொள்ளளவு 3 ஆயிரத்து 645 கன அடியாகும். இந்நிலையில் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு 3 ஆயிரத்து 328 கன அடியாக உள்ளது. இதன் காரணமாக ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் 2 ஆயிரத்து 429 கன அடியில் இருந்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் வழுதலம்பேடு, சிறுகளத்தூா், திருமுடிவாக்கம், குன்றத்தூா், காவனூா் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்: இந்நிலையில் நேற்று (நவ.30) இரவு 11 மணியளவில் செம்பரம்பாக்கம் உபரி நீர் செல்லக்கூடிய தரைப்பாக்கம் சாலை வழியாக, முகமது ரபீக் என்பவர் அவரது மனைவி மற்றும் 10 வயதுக் குழந்தையுடன் குரோம்பேட்டையில் உள்ள வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்டிருந்த உபரி நீரில் கார் வேகமாக அடித்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள முட்புதர் செடியில் மாட்டிக் கொண்டது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் பார்த்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து காரில் சிக்கிய மூவரையும் பத்திரமாகக் கயிறு கட்டி மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரை மீட்கும் பணியில் விருகம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்திற்கு வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி..! கோயில் நிர்வாகத்தினர் மீது தந்தை குற்றச்சாட்டு!