சென்னை: சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய ஆண் நண்பருடன், சென்னை அண்ணாநகர் விஆர் மாலிற்கு (VR Mall theatre) சென்ற இளம்பெண்ணுக்கு ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது. தன்னிடம் அந்த இளைஞன் தவறாக நடக்க முயன்றதாக அப்பெண் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் போலீசார் இதுகுறித்து அந்த மால் உள்ள பகுதி மட்டுமில்லாமல் மால் முழுவதும் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அண்ணாநகரில் வி.ஆர்.மால் செயல்பட்டு வருகிறது. இந்த மால் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி போலீஸ் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது. அனுமதி இல்லாமல் மியூசிக் பார்ட்டி நடத்தியது, அனுமதி இல்லாமல் பார்கள் நடத்தியது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கியது என பல சர்ச்சைகளில் சிக்கியது.
இந்நிலையில் 23 வயது பெண் ஒருவர், வி.ஆர்.மாலில் தனக்கு நடந்த சம்பவம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் சமூக வலைதளம் மூலம் ஆண் நண்பர் ஒருவர் பழக்கம் ஏற்பட்டு வி.ஆர்.மாலில் படம் பார்க்க அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, அங்கிருக்கும் குறைந்த கண்காணிப்புகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத சில பகுதிகளில் அழைத்துச் சென்று தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. குறிப்பாக அப்பெண், தான் பாதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தெரிவித்த பதிவுகளை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கினர். அதில் சில சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வி.ஆர்.மாலில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் எனவும்; காவல்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கருத்துகளைப் பதிவிட்டு இருந்தனர்.
குறிப்பாக, இந்த மாலில் இளைஞர்கள் ஆன்லைனில் பழகும் இளம்பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருக்க பயன்படுத்தும் இடமாக உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பண வசதி உள்ள இளைஞர்கள் சொகுசு காரில் வந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது மட்டுமல்லாமல் வி.ஆர்.மாலில் பின்புறம் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தி வருவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. இதனையடுத்து இந்திய அளவில் பேசும்பொருளாக மாறிய வி.ஆர்.மால் குறித்து சென்னை காவல்துறை கவனத்திற்கு வந்தது.
குறிப்பாக, இரவு 8 மணி முதல் 12 மணி வரை இளைஞர்கள் தவறான செயல்களை செய்ய சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடியாக அண்ணா நகர் போலீசார், ரோந்து காவலர்கள் மூலம் சோதனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூக வலைதள பக்கத்தையும் ஆய்வு செய்து, பெண்கூறிய குற்றச்சாட்டு தொடர்பாகவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அப்பகுதியில் சட்டவிரோதச் செயல்கள் இனி நடக்காமல் காக்கவும், கண்காணிப்பில்லாத அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் காவல்துறை பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து வி.ஆர்.மால் நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொழுதுபோக்கிற்கான அம்சங்களாக உள்ள இத்தகைய மால்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வருத்தம் அளிக்கும் ஒன்றாக உள்ளது. பல கோடிக்கணக்கில் நிறுவப்படும் இத்தகைய மால்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதால் இவ்வாறு குற்றங்கள் நடக்கின்றனவா? இளம் ஜோடிகளை தங்கள் வசம் ஈர்ப்பதற்காக இவைகளை மால் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டனரா? இரவுகளில் அங்கு நடக்கும் கேளிக்கைகளால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து இளம் தலைமுறையினர் சீரழிவின் பாதையை நோக்கி செல்கின்றனரா? உள்ளிட்ட பல கேள்விகள் இதன் மூலம் எழத் தொடங்கியுள்ளன. எனவே, இதுகுறித்து காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: Surprise Gift: Video: கணவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி!