சென்னை: சேப்பாக்கத்தை சேர்ந்த லட்சுமி (31) என்பவரிடம் லோன் தருவதாக கூறி பண மோசடி செய்த இரு பெண்கள் உட்பட 4 தனியார் வங்கி ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சுமியை கடந்த 1-ம் தேதி தனியார் வங்கியில் (PNB Bank) இருந்து அழைப்பதாகக் கூறி செல்போனில் தொடர்புகொண்ட பல்வேறு நபர்கள் அவருக்கு 5 லட்சம் ரூபாய் லோன் பெற்றுத் தருவதாகவும், இன்சூரன்ஸ் தருவதாகவும், பின்னர் தனிநபர் கடன் வழங்குவதாகவும் தொடர்ந்து பேசி உறுதியளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாகக் கூறியதை நம்பிய லட்சுமி எதிர் முனையில் பேசிய நபர்களின் பேச்சை நம்பியுள்ளார். இதன் பின் அவர்கள் கூறியபடி, செயலாக்க கட்டணம் மற்றும் சில கட்டணங்களுக்காக 31,500 ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் இருந்து கூகுள் பே மூலம், அவர்கள் கூறிய எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் பல நாட்கள் ஆகியும் தனக்கு தனிநபர் கடன் பற்றி எந்தவொரு தகவலும் தெரிய வராததால், தனக்கு அழைப்பு வந்த எண்ணிற்கு லட்சுமி மீண்டும் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் மாறி மாறி பேசிய ஆண் மற்றும் பெண் என சில நபர்கள் விரைவில் தனிநபர் கடன் கிடைக்கும் எனக்கூறி தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.
ஆனால் அதன் பின்னும் தனக்கு லோன் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து லட்சுமி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சைபர் கிரைம் காவல்துறையின் உதவியுடன் லட்சுமி செல்போனில் அழைப்பு வந்த தொடர்பு எண்ணை வைத்து டவர் லொக்கேஷனை ஆய்வு செய்தும், புகாரில் கூறப்பட்ட தனியார் வங்கிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், பெண்ணிடம் லோன் மோசடியில் ஈடுபட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த பால் ஜோசஃப் (27), கே.கே நகரை சேர்ந்த அரவிந்த் (22), அயனாவரத்தை சேர்ந்த தெரேசா (22) மற்றும் எண்ணூரை சேர்ந்த வினிதா (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ஒன்றாக பணியாற்றி வந்தவர்கள் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 75 சவரன் நகைகள் கொள்ளை.. 6 மணிநேரத்தில் 7 பேரை கைதுசெய்த போலீஸார்