சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம் செய்து அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கை முன்பு ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் அவை காவலர்கள் மூலமாக ஈபிஎஸ் உள்பட அவர் தரப்பு எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அதோடு நேற்று ஒரு நாள் சட்டப்பேரவையில் இருந்து ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த சம்பவம் மற்றும் சபாநாயகரை கண்டித்து ஈபிஎஸ் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும், இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்திருந்தார்.
ஆனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காகவும் ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் காவல்துறையினரின் உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று இரவு முதலே காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது - - எடப்பாடி பழனிசாமி