சென்னை: சென்னை பெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் சிராஜுதீன்(33). இவர் புது பெருங்களத்தூரில் ஷூ மற்றும் பேக் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சிராஜுதீன் மாதம் ஒரு முறை கடையின் வியாபாரம் சம்பந்தமாகப் பணத்தை எடுத்துச் செல்வதும் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று(டிச.16) வழக்கம் போல் சிராஜுதீன் 20 லட்ச ரூபாய் பணத்தைச் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புது பெருங்களத்தூர் கொண்டு செல்ல மின்சார ரயிலில் ஏறுவதற்கு நடைமேடையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் சிராஜீதினை வழிமறித்து, அவர்கள் காவல்துறையினர் எனக்கூறி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததுடன் பையிலிருந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.
இதனால் பதறிப்போன சிராஜுதீன் இது குறித்து எழும்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த இருப்புப் பாதை போலீசார், கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவின் பெயரில் எழும்பூர் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒருபகுதியாக அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஒருவரையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவரையும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருவரையும் நான்கே மணி நேரத்தில் தனிப்படை போலிசார் கைது செய்தனர். இதையடுத்து இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பணப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது கடலூரைச் சேர்ந்த தமிழ்மணி என்கிற சதீஷ்(27), பாலச்சந்தர்(42), பிரகாஷ்(29), சதீஷ் (22) அரியலூரைச் சேர்ந்த சிவா(32) என தெரியவந்தது.
மேலும் விசாரணையில், சிராஜுதீன் பணிபுரியும் கடையில் அடிக்கடி பணத்தைப் பையில் வைத்து கை மாற்றுவதை இவர்கள் நோட்டமிட்டு வந்ததும், அதன் அடிப்படையில் திட்டம் தீட்டி வழிப் பறிப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் ஐந்து பேரும் முதல்முறை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
பின்னர், 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து ரூபாய் 20 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 20 லட்சம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் இது அவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை: 3 வட மாநிலத்தவர்கள் கைது..!