சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சனபேஷ் பேகம் (52). இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகின்றார். 2015ஆம் ஆண்டு முதல் மதர் கிரீன் லேண்ட் சினிமா பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவிகுமார் என்கிற நிஜாமுதின் (51) என்பவரின் தயாரிப்பு நிறுவனத்தின் கேட்டரிங் ஆர்டரை சனபேஷ் பேகம் கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ரவிகுமார் தனது நிறுவனத்தின் மூலம் புதிய படம் தயாரிக்க உள்ளதாகவும், அதற்கு போதுமான பணமில்லை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என சனபேஷ் பேகத்திடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய சனபேஷ் பேகம் 7 லட்ச ரூபாய், 29 சவரன் நகையை ரவிகுமாரிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் நீண்ட மாதங்களாக ரவிகுமார் படத்தை ஆரம்பிக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த சனபேஷ் பேகம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்கு போலியான காசோலைகளை கொடுத்து ரவிகுமார் தலைமறைவானார்.
தன்னை ரவிகுமார் ஏமாற்றியதையடுத்து சனபேஷ் பேகம் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்து வந்த ரவிகுமாரை அவரது செல்போன் எண்ணை வைத்து தேடி வந்தனர்.
அப்போது ரவிகுமார் பெங்களூருவில் பதுங்கி இருந்து அடிக்கடி திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது தெரியவந்தது.
இதே போல் ரவிகுமார் நேற்று (அக்டோபர் 4) பெங்களூருவிலிருந்து கார் மூலமாக திருவல்லிக்கேணி வருவதை அறிந்த காவல்துறையினர் வாகன தணிக்கை அமைத்து ரவிகுமாரை கைது செய்தனர்.
பின் அவரிடம் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரவிகுமார் சினிமா மோகத்தில் தயாரிப்பு பட நிறுவனத்தில் பணி செய்ததாகவும், பின்னர் மதர் கிரீன் லேண்ட் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படம் தயாரித்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்தக் கடனை அடைப்பதற்காக கேட்டரிங் செய்யும் சனபேஷ் பேகத்திடம் படம் தயாரிக்க போவதாக பொய்யாக கூறி 7 லட்சம் ரூபாய், 29 சவரன் நகையை பறித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து சனபேஷ் பேகம் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால் போலி காசோலைகளை கொடுத்து ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரவிகுமாரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.