சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் தங்கம், வைரம், நவரத்தின கற்களை உள்ளிட்ட ஆபரண நகைகளை திருடிய வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் பணிப் பெண்ணை கையும் களவுமாக கைது செய்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (வயது 41). நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள். தமிழில் வை ராஜா வை, 3, சினிமா வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது லால் சலாம் படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் உள்ள வீட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்தார்.
அதில் "எனது தங்கை திருமணத்திற்கு பிறகு 2019-ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. செண்ட் மேரிஸ் சாலையில் உள்ள வீடு, நடிகர் தனுஷின் சிஐடி நகர் வீடு மற்றும் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் அந்த லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 10ஆம் தேதி லாக்கரில் இருந்த நகைகளை எடுக்க சென்ற போது, அதில் இருந்த வைரம், தங்க நகைகள், நவரத்தின கற்கள் என சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் லாக்கரில் தங்க நகைகள் வைத்திருப்பது வீட்டில் பணிபுரியும் பெண்கள் மற்றும் தனது கார் ஓட்டுனருக்கு மட்டுமே தெரியும்" என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி உள்பட மூன்று பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், 18 வருடங்களாக வைத்திருந்த தனது நகைகளை உடனடியாக மீட்டு தரக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி என்பவரின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து மந்தைவெளி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் அங்கமுத்து ஆகியோரிடம் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லாக்கரில் இருந்த நகைகளை சிறுக சிறுக ஈஸ்வரி திருடியது தெரிய வந்ததாக போலீசார் கூறினார். குறிப்பாக ஈஸ்வரிக்கு மூன்று மகள்கள் என்பதால் குடும்ப சூழ்நிலை காரணமாக நகையை திருட முடிவு செய்து சிறுக சிறுக திருடி விற்பனை செய்து நிலம் வாங்கியதாக போலீசார் கூறினர்.
குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் 95 லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்கி இருப்பதும், கடனை 2 வருடங்களில் அடைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தன்ர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென ஈஸ்வரி வேலையை விட்டு நின்று உள்ளார். இதையடுத்து ஈஸ்வரி வைத்திருந்த நகைகளை போலீசார் மீட்டு உள்ளனர். மேலும் ஈஸ்வரி நகையை விற்றது எங்கே? நிலம் வாங்கியது எப்படி? என தொடந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை..! என்ன சொல்கிறார்கள் குடும்பத் தலைவிகள்..?