சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், ரவிச்சந்திரன் (58). இவர் நேற்று கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்வதற்காகச்சென்றுள்ளார். அப்போது கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அறநிலையத்துறை அலுவலரான ரவிச்சந்திரனின் இருசக்கர வாகனம் அருகே வந்த போதை ஆசாமி ஒருவர் அவரது வாகனம் மீது வாந்தி எடுத்துள்ளார்.
இதைக்கண்ட ரவிச்சந்திரன் அந்த நபரிடம் முறையிட்டபோது, ரவிச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை ஆசாமி அருகில் இருந்த கல்லை எடுத்து ரவிச்சந்திரனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறியதால் ரவிச்சந்திரன் மயக்கமடைந்தார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரனுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ரவிச்சந்திரன் அளித்தப்புகாரின் அடிப்படையில் கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி தப்பியோடிய போதை ஆசாமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கை அகதி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விஏஓ கைது...