இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
சிறியவையே அழகு என்பது தான் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேலாண்மை மந்திரம் ஆகும். அதைப் பின்பற்றி தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலை ஏற்று செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களை இரண்டாகவோ, மூன்றாகவோ பிரிக்க வேண்டிய தேவை உள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் மிகப்பெரிய மாவட்டம் திருவள்ளூர். அதன் இப்போதைய மக்கள்தொகை 41 லட்சம். இது தனிநாடாக இருந்தால் உலகில் 130-ஆம் பெரிய நாடாக இருந்திருக்கும். இரண்டாவது பெரிய மாவட்டம் சேலம் ஆகும். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அதன் மக்கள்தொகை 34.82 லட்சம். அடுத்து கோவை மாவட்டத்தின் மக்கள்தொகை 34.58 லட்சம். இப்போது இந்த இரு மாவட்டங்களின் மக்கள்தொகை 38 லட்சத்தைக் கடந்திருக்கும். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த இரு மாவட்டங்களும் உலகில் 133, 134 ஆவது பெரிய நாடுகளாக இருந்திருக்கும்.
இவற்றுக்கு அடுத்தபடியாக 34 லட்சம் பேரைக் கொண்ட மதுரை மாவட்டம் 136-ஆவது நாடாகவும், திருச்சி 137-ஆவது பெரிய நாடாகவும் இருந்திருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை விட அதிக மக்களைக் கொண்ட இவை இன்னும் ஒற்றை மாவட்டமாக நீடிப்பது சிறந்த நிர்வாகத்திற்கு ஏற்றதல்ல. தலைநகரம் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்கள்தொகை 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 24 லட்சத்து 64 ஆயிரத்து 875 ஆகும். இன்றைய நிலையில் மக்கள்தொகை 27 லட்சத்தைக் கடந்திருக்கக் கூடும்.
தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை வளங்களும், வேளாண்மையும் சிறப்பாக இருக்கும் போதிலும், வளர்ச்சி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் மாவட்டம் மிகவும் பரந்து விரிந்து காணப்படுவது தான். நிலப்பரப்பின் அடிப்படையில் பார்த்தால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு (6286 ச.கிமீ) அடுத்தபடியாக 6188 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இது சென்னையை விட 15 மடங்கு அதிகமாகும். ஆனாலும், கடந்த 34 ஆண்டுகளாக இது ஒரே மாவட்டமாக தொடர்கிறது. மாவட்டத்தில் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு 158 கி.மீ பயணிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்கள் உள்ளன. 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இரு மக்களவைத் தொகுதிகள் இந்த மாவட்டத்தில் வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் தனி நாடாக அறிவிக்கப்பட்டால் உலகின் 143-ஆவது பெரிய நாடாக இருக்கும். பஹ்ரைன், மொரிஷியஸ், பூடான் போன்ற 92 நாடுகளை விட அதிக மக்கள்தொகை கொண்டதாக இருக்கும். இவ்வளவு பெரிய மாவட்டத்தை ஒரு மாவட்ட ஆட்சியர் நிர்வகிப்பதும், வளர்ச்சித் திட்டப் பணிகளை திறம்பட செயல்படுத்துவதும் சாத்தியமல்ல. 27 லட்சம் மக்களின் தேவைகளை நிச்சயமாக ஓர் அதிகாரியால் நிறைவேற்ற முடியாது.
பெரிய மாவட்டமாக இருப்பதால் திருவண்ணாமலை எதிர்கொள்ளும் இன்னொரு சிக்கல், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான தனிநபர் ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருப்பதாகும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது மட்டும் தான்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இணையான மக்கள் தொகை கொண்ட தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களும் பிரிக்கப்பட வேண்டியவை தான். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்தார். இதை நானும் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதமும் எழுதினேன். அங்குள்ள மக்களின் உணர்வுகளை மதித்து புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும்.
30 லட்சம் மக்கள் கொண்ட கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகும் கூட, விழுப்புரம் 23 லட்சம் பேருடனும், காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகும் கூட செங்கல்பட்டு மாவட்டம் 28 லட்சம் பேருடனும் பெரிய மாவட்டங்களாக திகழ்கின்றன. அவையும் கண்டிப்பாக பிரிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது மாவட்ட நிர்வாகம் மேம்படும்; உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். எனவே, தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயிலை மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை.. மனமிறங்குமா மத்திய அரசு?