கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருள்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்திருக்கிறது. அரிசி இருப்பு குறைவாக இருப்பதால் கடுமையான அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என வணிகர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் அனைத்து வகையான எண்ணெய்களின் விலை 30 விழுக்காடு வரை உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகளின் விலைகள் 40 முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன.
அரிசி, பருப்பு, எண்ணெய் உற்பத்தியும் விவசாயம் சார்ந்த பணிதான் என்பதாலும், அவைதான் மிக முக்கியமான உணவுப் பொருள்கள் என்பதாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகளையும் பாதுகாப்பு விதிகளுக்குள்பட்டு, செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்.
அந்த ஆலைகளிலிருந்து தமிழ்நாடு முழுவதும் சரக்குந்துகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுசெல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க: கரோனா நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை - கனிமொழி எம்.பி.