சென்னை: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (செப். 9) உத்தரவிட்டார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தைத் சேர்ந்த ஆர்.என். ரவி 1976ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து இந்தியக் காவல் பணி அலுவலராகத் தேர்வாகினார். 2012ஆம் ஆண்டு இந்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். 2019 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். தற்போது, ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமதாஸ் வாழ்த்து
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் 15ஆவது ஆளுநராக ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகள்.
புதிய ஆளுநர் ஆர்.என். ரவி நமது அண்டை மாநிலமான கேரளத்தில் காவல் துறை அலுவலராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால் தமிழ்நாட்டைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்.
தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, கல்வி, தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுக்காக தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் அத்தகைய நடவடிக்கைகளுக்கு புதிய ஆளுநர் துணைநிற்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு இடையூறு செய்யவே புதிய ஆளுநர்... சும்மா இருக்க மாட்டோம் - பொங்கும் அழகிரி