சென்னை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், இருவேறு கோரிக்கை மனுக்களை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் 40 எண்ணெய் கிணறுகள் அமைக்கவும் ஹைட்ரோகார்பனை எடுக்கவும் மத்திய அரசின் அனுமதியுடன் ஏற்பாடுகள் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விதித்த தடை உத்தரவை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'உபரி நீரைத் தடுக்கும் பொருட்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முயன்று வருகிறார். இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. நம் தமிழக எல்லையான ராசிமணலில் புதிய அணையைக் கட்டுவதன் மூலமே டெல்டா விவசாயிகளின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும். இந்த இரு கோரிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலரிடம் மனு அளித்துள்ளோம்' என்று கூறினார்.