சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. பச்சை மற்றும் நீல என இரண்டு வழித்தடங்கள் வாயிலாக 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல் விம்கோ நகர், திருவொற்றியூர், சென்னை சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மற்றும் ஒரு வழித்தடமும் உள்ளது.
இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சென்னை நகரில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளாக, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என 118.9 கி.மீ. தொலைவுக்கு மூன்று புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் 66 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். ஒவ்வொறு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துகொண்ட இருக்கிறது.
சென்னையில் இருக்கும் 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் டிக்கெட் கவுன்ட்டர்கள், ஆன்லைன், பயண அட்டை(Metro Travel Card), சிங்காரச் சென்னை அட்டை, தேசிய பொது பயண அட்டை (National Mobility Card), மெட்ரோ ரயில் செயலி (CMRL APP) இந்த வகைகளில் மெட்ரோ ரயில் டிக்கெட்களை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.
தினமும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டிக்கெட் கவுன்ட்டர்களில் பயணிகள் கூட்டத்தை குறைப்பதற்காக அண்மையில் வாட்ஸ்அப் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி நுழைவு வாயிலில் இந்த வங்கி அட்டையைக் காண்பித்து, பயணிகள் தங்கள் பயணத்தைச் செய்யலாம்.
மேலும், வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பயணத்திற்கான கட்டணத்தை வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக்கொள்ளும் நவீன தொழில்நுட்பமும் சென்னையில் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்படுத்த உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மணிப்பூர் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால்!