சென்னை: சென்னை மாநகரின் நுழைவு வாயிலாக திகழும் பெருங்களத்தூர் என்றாலே வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறித்த அச்சம்தான் முதலில் நினைவுக்கு வரும். பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது நிரந்தரமாக இருந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தி வந்தது.
மேலும், பெருங்களத்தூர் பகுதியில் விழாக்காலங்களில் பெரும் அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. அதேபோல், பெருங்களத்தூர் ரயில் நிலையம் கிராஸிங் பகுதியில் மேம்பாலங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.
இதனால் அப்பகுதியில் அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கடந்த 2020ஆம் ஆண்டு 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து நெடுங்குன்றம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன் பின்னர், கரோனா மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது.
அதன் பின்னர், பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பாலப் பணிகள் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து நெடுங்குன்றம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் செல்லக் கூடிய மேம்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணிகள் முடிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் மேம்பாலத்தைத் திறக்காமல் தடுப்புகள் போட்டு மூடி வைத்திருப்பதாகவும், இதனால் சீனிவாசா நகர், முடிச்சூர், ஆர்.எம்.கே நகர், பீர்க்கன்கரணை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள் தாம்பரம் மற்றும் வண்டலூர் செல்வதற்குச் சுமார் நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து பெருங்களத்தூர் குடியிருப்பு நலச் சங்கத் தலைவர் மகேந்திர பூபதி கூறுகையில், “பெருங்களத்தூர் மேம்பாலம் கட்டும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டுதான் முதல் கட்டமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லக்கூடிய மேம்பாலம் திறக்கப்பட்டது.
அதன் பின்பு, தற்போது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் மார்க்கமாக செல்லக் கூடிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லக் கூடிய சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதிப்படைகின்றனர். பெருங்களத்தூர் முன்பு மாதிரி தற்போது இல்லை. அதிகப்படியான ஐடி கம்பெனிகள் உள்ளிட்டவை உருவாகி உள்ளன.
தினந்தோறும் பணிக்கு செல்லக் கூடியவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக் கூடியவர்கள் பாதிப்பு அடைகின்றனர். அமைச்சர் வருகைக்காக பாலம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
எனவே, துறை சார்ந்த அமைச்சர்கள் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தால் அனைவரும் பயன் அடைவார்கள். பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை பகுதி மக்களுக்கு இது பல நாள் கனவு. ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் மேம்பாலம் கட்டப்பட்டு, அதன் மேல் மக்கள் சுலபமாக பயணிக்க வேண்டும்.
அதேபோல் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக் கூடிய மேம்பாலப் பணிகளும், பெருங்களத்தூரிலிருந்து நெடுங்குன்றம் பகுதிக்குச் செல்லக் கூடிய மேம்பாலப் பணியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் தினம் தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அந்த இரண்டு பாலங்களும் கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் எனக் கேள்வி குறியாக உள்ளது. எனவே, உடனடியாக அதிகாரிகள் பணியை துரிதப்படுத்தி பாலங்களைக் கட்டி முடிக்க வேண்டும்.
மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் மார்க்கமாக கட்டப்பட்ட மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டுவிட்டது. தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக் கூடிய மேம்பாலப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
பேருந்து நிலையத்தில் இருந்த கடைகளில் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டு தற்போது 40 சதவீதப் பணிகள் நடைபெற்று உள்ளது. இன்னும் 60 சதவீதப் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதத்திற்குள் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
அதேபோல் நெடுங்குன்றம் பகுதிக்கு செல்லக்கூடிய மேம்பாலம் வனப்பகுதியில் உள்ள இடங்களை கையகப்படுத்துவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. அதுவும் தற்போது முடிவடைந்துவிட்டன. அதேபோல் பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் பகுதிக்குச் செல்லக் கூடிய மேம்பாலப் பணிகள் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் திறக்கப்படவில்லை என செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது அங்கு பணிகள் முடிக்கப்பட்டு சாலைப் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
அதே போல், மேம்பாலத்தில் இருபுறமும் மின்னொளி விளக்குகளைப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான மின்சார இணைப்புகள் இணைப்பதற்கானப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறான பணிகளை முடிக்காமல் சாலையைத் திறந்துவிட்டால் விபத்துக்கள் தான் ஏற்படும். இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கொடூரமான வழக்குகளில் சாட்சியங்களின் வீடியோ, ஆடியோ பதிவு - அஸ்ரா கார்க்கிற்கு உயர் நீதிமன்றம் பாராட்டு