சென்னை: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் இருந்து மேப்பூர் செல்லும் சாலை வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையின் இருபுறங்களிலும் கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்பினால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.
இந்த சாலை குன்றத்தூர், மலையம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையாகும். இந்நிலையில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கப் பணிகள் நடத்த வேண்டும் எனவும், அதன் அறிக்கையை வரும் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை நிலைநாட்டும் அரசு அலுவலர்கள்:
பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு வந்து சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அரசு அலுவலர்கள் நேற்று (ஜன.12) ஈடுபட்டனர்.
அகரமேல் பகுதியில் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடாத இடங்களில் உள்ள வீடுகள், கடைகளையும் இடித்ததால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொங்கல் விழாவின்போது இடிக்காமல் பின்னர் அகற்றலாம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். சிலர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள், வரும் 16ஆம் தேதி வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தொடர்வதாகவும், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'சாதி, மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களியுங்கள்' - கமல்ஹாசன்