சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான இரண்டு நாள் சித்த மருத்துவ கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதாசேஷையன் மற்றும் இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து கருத்தரங்கு மலரையும் துணைவேந்தர் சுதா சேஷையன் வெளியிட்டார். இதனையடுத்து பேசிய துணைவேந்தர் சுதா சேஷையன், “சித்த மருத்துவம் பழங்கால மருத்துவம் எனவும், சித்தர்கள் கண்டறிந்த மருத்துவம் எனவும் கூறப்பட்டு வருகிறது. மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைபோல், சித்த மருத்துவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று எப்படி ஆட்டிப்படைத்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு சிறிய கிருமி எங்கோ உருவாகியது. அதன் அச்சத்தில் இருந்து மீளாமல், இன்னமும் மாஸ்க் போடலாமா என்ற அச்சத்துடன் நாம் இருந்து வருகிறோம்.
அந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே இருக்க கூடிய சித்த மருந்தை பயன்படுத்தி வந்தோம். கரோனா வருவதற்கு முன்னர் கப சூர குடிநீர் என்ற பெயர் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் இன்று உலகம் முழுவதும் தெரியும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் மூட்டுவலி, முதுகுவலி அவ்வளவாக இல்லை.
இன்று அத்தனை பேருக்கு மூட்டுவலி, முதுகு வலி என கூறுகின்றனர். நாட்டில் புதிய புதிய நோய்கள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குறிப்பாக சென்னையில் சில கல்வி நிறுவனங்களில் ஏசி வசதி முற்றிலும் தவிர்த்து செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த நிறுவனங்களுமே முழுமையான ஏசி பயன்பாட்டிற்கு மாறிவிட்டனர்.
இந்த ஏசி பயன்பாடு மூலம் ஏற்படும் உடல் பாதிப்புகள், உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற பல காரணங்களால் புதிய புதிய நோய்கள் வருகிறது. தொலைக்காட்சிப்பெட்டி வரும் காலக்கட்டத்தில் பொட்டேட்டோ கோச் சின்ட்ரோம் என்ற நோய் இருந்தது.
அதாவது ஒரே இடத்தில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டதால் கொழுப்பு சார்ந்த நோய்கள் வந்தது. இதுபோல் தற்போது பல நோய்கள் வருகிறது. இதற்காக பாரம்பரிய பழைமையான உணவு முறைகளுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்” என்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ், “தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாதிலங்களில் இருந்தும் 15 கல்லூரிகளில் இருந்து சித்த மருத்துவ மாணவர்கள் கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ளனர். இதில் 608 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். புதிய நோய்களும், தொற்றா நோய்களும், வருமுன் காப்போம் என்ற திட்டத்திற்கான மருந்துகளை கண்டறிவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காசநோய் உள்ளவர்கள் தாமதமின்றி சிகிச்சையை தொடங்க வேண்டும்!