பத்து வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியினர் மக்களை நேரடியாக சந்தித்து பரப்புரை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். தற்போது அந்த பரப்புரைக்கு நிகரான முக்கியத்துவத்தை சமூக வலைதளங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஸ்மார்ட் ஃபோனால் பிரபஞ்சம் கைகளுக்குள் அடங்கியிருக்கிறது. ஒருவர் சுறுசுறுப்பாக இயங்குகிறாரா என்பது தொடங்கி ஒருவர் உயிருடன் இருக்கிறாரா என்பதுவரை சமூக வலைதளங்களை வைத்தே கண்டறியப்படுகிறது.
அப்படிப்பட்ட சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் தங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது தற்போதைய அவசிய தேவையாகிறது. அறிக்கை வெளியிடுவதில் தொடங்கி தான் செல்லும் இடங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்வது என தங்களை மக்களோடு அவர்களால் கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது.
சமூகவலைதளங்கள் அனைவரது அத்தியாவசியத் தேவையாக மாற ஆரம்பித்திருந்த சமயத்திலேயே திமுக தலைவர் கருணாநிதி தன்னை அதில் ஈடுபடுத்திக்கொண்டு ஆக்டிவாக வைத்துக்கொண்டார். அவருக்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்களுக்கு சமூக வலைதள கணக்குகள் முக்கியமாக பட்டன.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஈழப் போர், 2ஜி விவகாரம் என அதிகமான விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கின. ஆனாலும், காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் 2011ஆம் ஆண்டோ நிலைமை அப்படியே மாறியது.
அந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் வாக்களித்தனர். அவர்கள் அனைவருமே சமூக வலைதளங்களில் பெரும்பாலும் தீவிரமாக இயங்கிய காலக்கட்டம் அது. அப்போது, திமுகவுக்கு எதிரான விவாதங்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக அக்கட்சியினர் கூறுமளவுக்கு நிலைமை சென்றது.
அதேபோல், 2014 மக்களவைத் தேர்தலிலும் மோடியின் வெற்றிக்கு ஊடகங்கள் எவ்வளவு பெரிய காரணம் என்று பெரும்பாலானோரால் கருதப்படுகிறதோ அதேபோன்று சமூக வலைதளங்களுக்கும் பங்கு இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
முக்கியமாக, எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர் என்று பெயரெடுத்த ஜெயலலிதாவே, 2015 சென்னை வெள்ளத்தின்போது அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, வாட்ஸ் அப்பில் அறிக்கை விட்டார்.
மேலும், தற்போது மேடைப் பேச்சை நின்று கேட்கும் அளவுக்கு யாருக்கும் நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை என்று கருதும் அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களை ஒரு டிஜிட்டல் மேடையாகவே கருதுகின்றனர்.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரடியாக களத்தில் எவ்வாறு சுறுசுறுப்பாகச் சுழன்றார்களோ அதேபோல், சமூக வலைதளங்களிலும் இயங்கினார்கள்.
தமிழ்நாடு அரசியலில் பாடல்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கருணாநிதி தொடங்கி தற்போதைய ஸ்டாலின், எடப்பாடிவரை பரப்புரைப் பாடல்களை வெளியிடுவது என்பது தொன்றுதொட்டுவருகிறது. அந்தப் பாடல்களை கட்சியினர் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருவதும் கவனிக்கத்தக்கது.
மேலும், நிறைவேற்றிய திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் தன்னை கொண்டு செல்ல ஆளும் அரசும், ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகளும் சமூக வலைதளங்களை தற்போது அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.
உதாரணத்திற்கு, "ஒன்றிணைவோம் வா" என்று திமுக ஆரம்பித்த திட்டத்தை, அக்கட்சி சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என நம்பியது.
அதேபோல், தங்களைப் பற்றி எந்தவித நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தாலும், தான் ட்ரோல் செய்யப்பட்டாலும் அதனை அரசியல் தலைவர்கள் விரும்புவதாகவே கூறப்படுகிறது. ஏனெனில், மக்கள் மத்தியில் தங்கள் முகம் லைம் லைட்டை விட்டு விலகிவிடக்கூடாது என்பது அவர்கள் கவனமாக இருப்பதாகவும் ஒரு தரப்பால் பேசப்படுகிறது. சமீபத்தில்கூட தர்மபுரி எம்.பி செந்தில்குமாரும், எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணியும் ஸ்டாலிந்தான் வாராரு விடியல் தர போறாரு என்ற பாடலுக்கு நடனமாடினர். ஆனால் அவர்கள் நடனம் ஆடிய வீடியோவில் சினிமா பாடல்களை இணைத்து திமுகவின் எதிர் தரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதேசமயம் இவ்வாறு நடனம் ஆடினால் எதிர் தரப்பிலிருந்து ட்ரோல் செய்யப்படும் எனவும், அதனை வைத்து மக்களிடம் மேலும் நெருக்கமாகலாம். எனவேஅதைத்தான் திமுக தரப்பும் எதிர்பார்த்ததாக எனவும் ஒரு தகவல் உலா வருகிறது. ஆகமொத்தம் அரசியல் கட்சிகளுக்கு சமூக வலைதளங்களுக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது என்றே கருதப்படுகிறது.
ஒரு அரசியல் கட்சி தலைவர் முன்னர் 24 மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் இயங்க வேண்டியிருந்தால், தற்போது அவர்களுக்கு தங்களின் இயங்கும்நேரம் அதிகரித்திருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அரசியல்வாதிகள் களமாட வேண்டியது இப்போது ஒரு களத்தில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும்தான்.