தினந்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து சென்னை மாநகரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துவரும் பாதிப்பு சென்னை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. குறிப்பாக, ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகிய பகுதிகளில் கரோனா பாதிப்பு உச்சமடைந்துவருகிறது.
இந்நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அமைச்சர்கள் முகாமிட்டுவருகின்றனர். அந்த வகையில், தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வுசெய்தார். அப்போது, களப்பணியாளர்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தண்டையார்பேட்டை மண்டலத்தைப் பொறுத்தவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்த விழுக்காட்டில் உள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட மேற்கு வங்காளத்தை விட தமிழ்நாட்டில் 11 லட்சம் பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் களப்பணியாளர்களைக் கௌரவப்படுத்த முதலமைச்சரிடம் பரிந்துரைப்போம். அவர்களின் பணி அளப்பரியது என முதலமைச்சரே வாழ்த்தி டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 80 கோடி மக்களுக்கு நவம்பர் வரை இலவச ரேஷன் - பிரதமர் மோடி அறிவிப்பு