சென்னை: கலாஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாகத் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, முன்னிலையில் காலாசேத்ரா இயக்குனர்ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, கல்லூரி உள்ளீட்டுப் புகார் குழு (ICC கமிட்டி) உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள மகளிர் ஆணையம் அலுவலகத்தில் ஆஜராகினர். சுமார் 40 நிமிடங்கள் இந்த விசாரணையானது நடைபெற்றது.
இந்த விசாரணையின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி, "நாங்கள் விசாரணைக்குச் சென்ற போது இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இல்லாத காரணத்தால் இன்று நேரில் விளக்கம் கேட்க அழைத்திருந்தோம். இந்த நால்வர் மீதும் இதுவரை எந்த புகார் வரவில்லை என கூறினார். இதைத் தொடர்ந்து, கலாஷேசேத்ரா கட்டமைப்பு குறித்தும், அங்குப் படிக்கக்கூடிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும் மாணவிகள் தேர்வு எழுத வேண்டும். அவர்கள் ஆஃப்லைன் வழியாகத் தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர் அதையும் இயக்குநரிடம் அறிவித்துள்ளோம். மாணவிகள் இதுவரை பாலியல் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள ஐசிசி கமிட்டியின் உள்ளிட்டுப் புகார் குழு அறிக்கையைக் கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.
தற்போது குற்றம் சாட்டப்பட்ட மற்ற 3 நபர்களும் கல்லூரிக்கு அனுமதிக்க கூடாது. மேலும் ஐசிசி கமிட்டி வலுப்படுத்தவும் அடுத்து வரக்கூடிய மாணவிகளுக்கு இந்த கமிட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவித்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். ஐசிசி குழுவின் அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய அறிவித்துள்ளோம்.
அந்த அறிக்கை தாக்கல் செய்த பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும். தேர்வு குறித்து மாணவிகளுக்கு இன்று மாலை சுற்றறிக்கை அனுப்பப்படும் என இயக்குநர் கூறியுள்ளதாகத் தெரிவித்தார். கலாஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக, சென்னையில் இன்று அதிகாலை பேராசிரியர் ஹரி பதுமனைத் தனிப்படை போலிசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது!