சென்னை: பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உரிய நேரத்தில் ஒதுக்காமல் காலந்தாழ்த்துவதும், சென்ற ஆண்டிற்கான கூடுதல் நிதியை இன்னும் அளிக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்கள், தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அறிவுக் கோயில்களாக விளங்கும் பல்கலைக்கழகங்களில், அறிவின் ரகசியங்களை கற்றுக் கொள்ளும் பயிற்சியாளர்களாக மாணவர்கள் விளங்குகின்றனர். சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையங்களாக பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன. இப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு போதுமான நிதியை வழங்குவது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவால் ‘சிறந்த திறன்கொண்ட பல்கலைக்கழகம்’ என்ற அந்தஸ்தைப் பெற்றதும், ஐந்து நட்சத்திர தகுதியைப் பெற்றதும், இலண்டன் பல்கலைக்கழகத்தின் மாதிரியில் துவங்கப்பட்டதும், மிகப் பழமை வாய்ந்ததுமான பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்.
இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை வகித்த ராதாகிருஷ்ணன், வி.வி. கிரி, ஆர்.வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரை இந்த நாட்டிற்கு அளித்த பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம். நோபல் பரிசு பெற்ற சர். சி.வி இராமன் மற்றும் டாக்டர் சந்திரசேகர் ஆகியோரை இந்த நாட்டிற்கு அளித்த பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்.
இப்படி பிரசித்திப்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மாதச் சம்பளத்தைக்கூட தர இயலாத சூழ்நிலை நிலவுவதாகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொத்த மாதச் செலவிற்கு 18.61 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 31- 5-2023 அன்றைய நிலவரப்படி சென்னைப் பல்கலைக்கழகத்திடம் 5 கோடி ரூபாய் மட்டுமே இருந்ததாகவும், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு மட்டும் 11.5 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியிலிருந்தும், அறக்கட்டளை நிதியிலிருந்தும் 7.6 கோடி ரூபாய் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. அரசோ அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்குக் கூட நிதியை ஒதுக்காமல் காலந்தாழ்த்தி வருவதாக செய்திகள் வருகின்றன.
உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்ககம், அரசுக்கு பரிந்துரைத்த 2021-2022ஆம் ஆண்டிற்கான 11.46 கோடி ரூபாய் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பங்கு குறித்து எவ்வித விவரமும் தங்களிடம் இல்லை என்று பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமைதான் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நிலவுவதாகத் தகவல்கள் வருகின்றன.
ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் குளறுபடி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் குளறுபடி, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது சென்னைப் பல்கலைக்கழகமும் இடம்பெற்று உள்ளது வேதனையளிக்கும் செயலாகும். ‘நிதிப் பற்றாக்குறை’ குறைந்துவிட்டது, ‘வருவாய்ப் பற்றாக்குறை’ குறைந்துவிட்டது என மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க. அரசு, எதிர்கால மாணவரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உரிய நேரத்தில் ஒதுக்காமல் காலந்தாழ்த்துவதும், சென்ற ஆண்டிற்கான கூடுதல் நிதியை இன்னும் அளிக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஒரு பக்கம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என்றால் மறுபக்கம் நிதிச் சீரழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், சம்பளம் வழங்காமை, பதவி உயர்வு வழங்காமை, அகவிலைப்படி உயர்வு வழங்காமை, கொலை, கொள்ளை என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னைப் பல்கலைக்கழக விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய நிதியை, மானியத்தை உடனடியாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிடவும், பிற பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும்’’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Bonalu festival: ஹைதராபாத்தில் 'போனாலு' திருவிழா இன்று கோலாகல துவக்கம்!