சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் மற்றும் அவரது அணியின் தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான் கலந்து கொண்டனர். 2017ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தற்போது மீண்டும் அவர்களோடு கைகோர்த்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்ட நிலையில் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். ஏற்கனவே, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்திக்க இருப்பதாக பல முறை ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, சசிகலாவையும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்து சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது அதிமுக அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர்த்தி இருந்தார். ஆனால், சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து கொண்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கினார். அதன் பிறகு, நான்கு ஆண்டு காலம் ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி, 2021-ல் தோல்வி அடைந்தார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக பயணம் செய்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென பொதுக்குழு மூலம் நீக்கம் செய்யப்பட்டார்.
நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதனால், எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்ள தயாரான ஓபிஎஸ், மீண்டும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் கைகோர்க்க முடிவு செய்தார். இவர்கள் மூவரும் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய கணிசமான சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்வதற்கு சரியாக இருக்கும் என ஓபிஎஸ் தரப்பினர் நம்புகின்றனர்.
இந்தச் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்வது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, அதிமுகவை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மீட்பது தொடர்பாகவும், அடுத்தடுத்த மாநாடு மற்றும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் பாஜகவுடனான கூட்டணி தொடர்பாகவும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு!