சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ளது. இதில் அதிமுக அலுவலக மோதல் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு வழக்கு ஆகியவை நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை உயர் நீதிமன்ற ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு அளித்த பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பு, ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக அமைந்தது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு விசாரணையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இது இபிஎஸ் தரப்பிற்கு சாதகமாக அமைந்தது. இறுதியாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி தொடர்பான வழக்கில் இபிஎஸ் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இருப்பினும் இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (செப் 14) சென்னை உயர் நீதிமன்றத்தில், இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு தடை கோரிய இபிஎஸ்சின் வாதத்தை நிராகரித்த நீதிபதி, தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் தரப்பிற்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும் நேற்றைய முன்தினம் இபிஎஸ்சின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
இவ்வாறான சூழலைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டனர். மேலும் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதி கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு அளித்திருந்தது.
இந்த தீர்ப்பிலும் பல குளறுபடிகள் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் உறுதியாக நம்பி வருகின்றனர். இதனால் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில், அதுவே தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்பதால் ஓபிஎஸ் தரப்பினர் ஆர்வமாக தங்களது பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில்தான் அதிமுகவின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் சந்தித்துள்ளனர்.
ஒற்றைத்தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து இரண்டாவது முறையாக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகலா மற்றும் தினகரனை இணைப்பது குறித்தும், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடல் விவகாரம் - அலுவலக மேலாளர் நேரில் விளக்கம்