சென்னை: தமிழக சிறைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், விசாரணைக் கைதிகள் மற்றும் பெண்கைதிகள் தனித்தனியாகவும், வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளும் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் செயல்களையும் சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த கண்காணிப்பை மீறி, அவ்வப்போது சிறைக்குள் கைதிகள் இடையே மோதல், பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும், போதைப்பொருட்கள் விற்பனை, தடையை மீறி செல்போன் பயன்படுத்துவது, அதற்கு சிறைக் காவலர்கள் உடந்தையாக இருந்து வருகின்றனர் போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இது போன்ற சட்ட விரோத செயல்கள் சிறை வளாகத்தில் தொடர்ந்து நடைபெறுவதால், இதனைக் கண்காணிக்கவும், தடுக்கவும், மேலும் கைதிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க அதிகாரி தரப்பில் முடிவு செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தடுக்கும் வகையில், சிறை வளாகம் முழுவதும் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள புழல், கோவை, பாளையங்கோட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மத்திய சிறை வளாகங்கள், சுற்றுச்சுவர்கள் மற்றும் வெளிப்புறங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான ஒப்புதலைப் பெற தமிழக அரசுக்கு, சிறைத்துறை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பதன் மூலம், சிறை வளாகத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்களைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் அத்துமீறல்கள் முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, விரைவில் ட்ரோன் கேமரா மூலம் சிறை வளாகம் கண்காணிக்கப்படும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு! வனத்திற்குள் சென்ற போது மின்வயர் உரசி பரிதாபம்