சென்னை: சென்னை ஆவடி நகராட்சியின் 18ஆவது வார்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், ஆறாவது பிளாக்கில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் மூடப்படாமல் உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் அதில் விழுந்து காயம் அடைவதாகவும் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனது மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு திரும்பி வரும் வழியில், திறந்து கிடந்த கால்வாயில் விழுந்து காயம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஆவடி மாநகராட்சி உதவிப்பொறியாளர் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், மூடப்படாமல் இருக்கும் மழைநீர் கால்வாயை மூடக்கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காதது மனித உரிமை மீறல் என்பதால், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்கவும், குறிப்பிட்ட அந்த கால்வாயை சரி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாளை அண்ணாவின் பிறந்தநாளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம்!