இதுதொடர்பாக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பில், ஜுன் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மிக அவசரமான வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு, ஜுன் 1 முதல் 11ஆம் தேதி வரை வழக்குகளை விசாரிக்கும் எனவும், அதில் ஜுன் 1 முதல் 3ஆம் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எஸ்.கண்ணம்மாள் அமர்வு ரிட் வழக்குகளையும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் - ஆர்.என்.மஞ்சுளா அமர்வு குற்ற வழக்குகளையும் விசாரிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முறையே ரிட் வழக்குகள், சிவில் வழக்குகள், முன் பிணைத் தவிர்த்து பிற குற்ற வழக்குகளை விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஜுன் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நீதிபதிகள் கிருபாகரன் - தமிழ்ச்செல்வி அமர்வும், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் - ஆர்.பொங்கியப்பன் அமர்வும், நீதிபதிகள் வி.பார்த்திபன், எம்.சுந்தர், எம்.நிர்மல் குமார் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 9 முதல் 11ஆம் தேதி வரை நீதிபதிகள் டி.ராஜா - வி.சிவஞானம் அமர்வு, நீதிபதிகள் எம்.துரைசாமி - ஆர்.ஹேமலதா அமர்வு மற்றும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அப்துல்குத்தூஸ், ஜி.கே.இளந்திரையன் ஆகியோரும் வழக்குகளை விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மதுரைக் கிளை நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் - எஸ்.ஆனந்தி அமர்வு, நீதிபதிகள் கல்யாண சுந்தரம் - தாரணி அமர்வு, நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், நக்கீரன், ஆதிகேசவலு, சுவாமிநாதன், சந்திரசேகரன் ஆகியோர் மூன்று பிரிவுகளாக வழக்குகளை விசாரிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணை மனுக்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே மனு தள்ளுபடி ஆகியிருந்தால் அதே நீதிபதி முன்புதான் மீண்டும் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும், பிணை ரத்து கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களும் ஏற்கெனவே பிணை வழங்கிய நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு