Omicron Scare: தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை இன்றி, வழக்கம்போல் இயல்பாக செயல்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளை மூடிவிட்டு, ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.