சென்னை: தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது "தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 10,000 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வு முலம் முறையாக பணியமர்த்தப்பட்டு 4 முதல் 8 வருடங்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.
பணியில் இணையும் போது 2 வருடத்தில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்றுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டும் இன்று வரை அதை நிறைவேற்றவில்லை.
கரோனா காலகட்டத்தில் சிகிச்சை வழங்க போட்டி தேர்வின் முலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் சுமார் 2500 பேர் இரண்டரை ஆண்டுகள் பணி முடித்த பின் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தன்னலமின்றி மருத்துவ சிகிச்சை மற்றும் மகப்பேறு சேவை வழங்கும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற எந்த அவசர மற்றும் அத்தியாவசிய விடுப்புக்களும் மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு போன்ற எந்த பலனும் கிடைப்பதில்லை. தற்போது தமிழ்நாட்டில் சுமார் 17000 நிரந்தர பணியிடங்களும் 13000 ஒப்பந்த பணியிடங்களும் உள்ளன. அதில் 40 சதவீதத்திற்கு மேல் நிரந்தர தன்மையற்ற தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்களாகவே உள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1400 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால் சுமார் 8500 செவிலியர்கள் NRHM திட்டத்தின் தொகுப்பூதிய முறையில் பணி செய்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள 1370 ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு நிரந்தர செவிலியர் பணியிடம் கூட இல்லை. அரசு மருத்துவமனைகளில் நிரந்தர தன்மையுடைய பணியாளர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் தற்போது தமிழ்நாடு அரசு செவிலியர்களை நிரந்தர தன்மையற்ற ஒப்பந்த முறையில் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக பணியமர்த்தி வருகிறது.
இது மருத்துவ துறை மற்றும் பொது சுகாதார துறை அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில் (NMC) மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயங்கள் (IPHS) ஆகியவற்றின் பரிந்துரைகளின் படி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் எண்ணிக்கை இல்லை. அந்த பரிந்துரைகளில் நான்கில் ஒரு பகுதி பணியிடங்கள் (நிரந்தர பணியிடம் மற்றும் தொகுப்பூதிய பணியிடம்) மட்டுமே உள்ளன.
இதனால் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் சேவை வழங்குவதில், குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் செவிலியர்களின் கடினமான உழைப்பினால் அந்த குறைகள் ஏதும் இன்றி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைகளின் படி நிரந்தர தன்மையுடைய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கினால் இன்னும் தரமான சிகிச்சை வழங்க முடியும்.
தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இரண்டாம் கட்டமாக நிரப்பப்பட வேண்டிய ஒப்பளிக்கப்பட்ட செவிலியர் பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த 13.4.2022 அன்று துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப IPHS மற்றும் NMC பரிந்துரைகளின்படி நிரந்தர பணியிடங்கள் உருவாக்கி பணி நிரந்தரம் செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை அது குறித்து எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பிலே போடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியிருந்தது ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. கடந்த காலங்களில் பெற்ற அனைத்து உரிமைகளும் தொடர் போராட்டங்களின் மூலமாக மட்டுமே கிடைத்தவை என்பதை மறுக்க முடியாது.
அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு நாம் சென்னை DMS நடத்திய 3 நாள் காத்திருப்பு போராட்டத்தின் விளைவாக நாம் பெற்று வந்த ரூ.7700 ஊதியம் ரூ14000 ஆக மற்றப்பட்டது. அந்த போராட்டத்தின் மூலமாக வந்த பொது நல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையின் உழைப்பாளர் சிலை முன் நடத்திய தர்ணா போராட்டத்தின் மூலமாக ரூ.14000 இருந்த மாத ஊதியம் ரூ 18000 மாக உயர்த்தப்பட்டதுடன் அரசு விடுமுறைக்கான ஈடு செய் விடுப்பும் கிடைத்தது. தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் தற்போது வரை சுமார் 4500 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் பெற்றுள்ளனர். எனினும் அன்று போராடி பெற்ற மகப்பேறு விடுப்பு தற்போதைய திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டதுடன், மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் பெற்றவர்களிடமிருந்து அந்த ஊதியத்தையும் திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டும், அந்த உத்தரவை நீர்த்து போகும் விதமாக தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக பிற மருத்துவ ஊழியர்களின் பணியுடன் ஒப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு தவறான தகவலை வழங்க நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது மருத்துவத்துறை. எனினும் தொகுப்பூதிய செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் பிற ஊழியர்களின் பணியையும் செய்யும் நிலையில், அதை செய்யவில்லை என்று எழுதி தரும்படி உயர் அதிகாரிகளில் மிரட்டப்பட்டு ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த ஆட்சி காலத்தில் நடத்திய எல்லா போராட்டங்களிலும் பங்குபெற்று போராட்டங்களுக்கு ஆதரவு தந்த திமுக முன்னணி நிர்வாகிகளும், அமைச்சர்களும் தற்போது மவுனம் காக்கின்றனர். செவிலியர்களின் போராட்டங்களை நியாயமானது என்று அறிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அமைதி காக்கும் நிலையில், நாங்கள் போராடி பெற்ற உரிமைகளையும் ஒன்றொன்றாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றி தர தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் விதமாக உலக செவிலியர் தினமான மே.12 நாளை சென்னையில் உண்ணாவிரதம் நடத்தப்படும்” என அந்த அறிக்கையில் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "ரூ.1 லட்சம் கோடி மதுபான ஊழல்" - மு.க.ஸ்டாலின் அரசு மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!