சென்னை: எருக்கஞ்சேரியை சேர்ந்த பிரபல ஏ+ வகை ரவுடி வெள்ளை பிரகாஷ்(31). இவர் மீது மூன்று கொலை வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெள்ளை பிரகாஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் பூந்தமல்லி அருகே பதுங்கி இருந்த ரவுடி வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி செங்குன்றம் அப்பு ஆகிய இருவரை அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து வெள்ளை பிரகாஷ் வீட்டில் சோதனை செய்த போது, 40 நாட்டு வெடிகுண்டுகள், 40 அரிவாள் மற்றும் தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 2015ஆம் ஆண்டு தாமரைப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் தென்னரசு என்ற ரவுடியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வெள்ளை பிரகாஷ் கொலை செய்ய திட்டம் போட்டு கொடுத்துள்ளார். இதனால் உயிரிழந்த தென்னரசுவின் சகோதரர் பாம் சரவணன் என்பவருக்கும் வெள்ளை பிரகாசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால் பாம் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து வெள்ளை பிரகாஷை கொலை செய்யக்கூடும் என்பதால் முன்னதாகவே பாம் சரவணனை கொலை செய்ய வெள்ளை பிரகாஷ் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இதனால் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பாம் சரவணனை கொலை செய்ய முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், கைது செய்யப்பட்ட ரவுடி வெள்ளை பிரகாஷை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: உயர்நீதிமன்ற முன்ஜாமின் ஆவணங்களில் மோசடி; திமுகவை சேர்ந்த இருவர் கைது