சென்னை: கடலூர் மாவட்டம், நைனார்குப்பம் கிராமத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கிராம பஞ்சாயத்து தலைவரை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அரசு, அதற்கான பட்டாவும் வழங்கியது. இந்த பட்டாவை ரத்து செய்யக் கோரி, கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன், இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பியுள்ளார்.
கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி பஞ்சாயத்து தலைவர் மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரனைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவில் இருந்து, அவர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை கொண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிராக கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய செயல், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல், அடிப்படை உரிமைகளை மீறிய செயல் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விசாரனை மேற்கொண்ட நீதிபதி, கடலூர் மாவட்டம், நைனார்குப்பம் கிராமத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி மனுதாரரான கிராம பஞ்சாயத்து தலைவர் மோகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எந்த சட்டத்தின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து நைனார்குப்பம் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கவும் மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: கலெக்டர் ஆபீஸ் கட்ட குத்தகைக்கு எடுக்கப்பட்ட கோவில் நிலம்- வாடகை பாக்கியை செலுத்திய தமிழ்நாடு அரசு