சென்னை: சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிடக்கோரி அர்ஜூன் சம்பத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மனு விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜூன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த கடிதத்தில், "எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம்" என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடவோ, விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன் என்றும் உத்தரவாத கடிதத்தில் அர்ஜூன் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் அர்ஜூன் சம்பத் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உத்தரவாத கடிதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜூன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ட்ரோன் மூலம் மருந்துப்பொருட்கள் டெலிவரி - டாடாவின் திட்டம் தொடக்கம்