தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 25ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசுத் தரப்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது முறையாக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவக் கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், "மருத்துவர்கள் நாளைக்குள் பணிக்கு வராவிடில் 'பிரேக் இன் சர்வீஸ்' நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், பணி மூப்பு சலுகை ரத்தாகும். பணிக்கு வராத மருத்துவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு காலியிடங்களாக அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அமைச்சரின் அறிவிப்பு பரபரப்பை கிளப்பிவரும் நிலையில், அரசு சாரா சேவை மருத்துவர்கள் அமைப்பின் செயலாளர் கார்த்திகேயன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "தற்போது தமிழ்நாட்டில் மழைக்காலமாக உள்ளது. இந்த நிலையில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகளவில் பரவிவருகின்றன. இதனால், அரசு மருத்துவமனையை மட்டும் நம்பியுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
இதுபோன்ற நிலையில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஊதிய உயர்வு வேண்டுமென கூறுவது அவர்களின் நியாயமான கோரிக்கையாகும். ஆனாலும், நோயாளிகள் பாதிக்காத வகையில் அவர்கள் போராட்டத்தினை நடத்த வேண்டும்.
நோயாளிகள் பாதிக்காத வகையில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் நாங்களும் இணைந்து பணிபுரிவோம்" என்று அவர் தெரிவித்தார்.