சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் மாண்டஸ் புயல் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. வட கிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. அதிகபட்சமாக சின்னக்கல்லார், திருவள்ளூரில் 9 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இது நாளை முதல் படிப்படியாக குறையும். மாண்டஸ் புயலில் மீதம் உள்ள பகுதி வட தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. அது மேற்குத் திசையில் நகர்ந்து, நாளை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் மேற்குத் திசையில் நகர்வதால் பாதிப்பு எதுவும் இருக்காது.
வடகிழக்குப் பருவமழையினைப் பொறுத்தவரையில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை பதிவான மழையின் அளவு 401 மி.மீ. இது இயல்பான மழை ஆகும். சென்னையைப் பொறுத்தவரை 856 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 16 சதவீதம் அதிகம். வங்கக் கடலில் புதிதாக புயல் உருவாகவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறப்பு!