சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை, செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் நவம்பர் 14ஆம் தேதிவரை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைன் மூலம் பெற்றது. இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு எழுத இரண்டு லட்சத்து 60ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதற்கான எழுத்துத் தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை காலை, மாலை இருவேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், அன்று தேர்வு கிடையாது. மேலும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ், பிப்ரவரி 13ஆம் தேதி வணிகவியல்; மனை அறிவியல், இந்திய கலாசாரம், இயற்பியல்; பிப்ரவரி 14ஆம் தேதி புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல், பிப்ரவரி 15ஆம் தேதி தாவரவியல், உயிர் வேதியியல், விலங்கியல், உடற்கல்வி இயல் தேர்வுகள் நடைபெறும்.
மேலும் பிப்ரவரி 16ஆம் தேதி காலை,மாலையில் கணக்கு; பிப்ரவரி 17ஆம் தேதி காலையில் கணக்கு, மதியம் ஆங்கிலம்; பிப்ரவரி 18ஆம் தேதி காலை, மாலையில் ஆங்கிலம்; 19ஆம் தேதி நகராட்சித் தேர்தல் விடுமுறை; 20ஆம் தேதி கம்ப்யூட்டர் அறிவியல் தேர்வு நடைபெறும்.
விதிமுறைகள்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வர்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் பதிவுசெய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
முதலில் தாங்கள் தேர்வு எழுத உள்ள மாவட்டத்தின் விவரத்தையும், தேர்விற்கு 3 நாட்கள் முன்பு தேர்வு மையத்திற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் உள்ள நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வந்ததற்கான தகவலை ஏதேனும் ஒரு அடையான ஆவணத்துடன் தெரிவிக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்யும்போது பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.
தேர்விற்கு காலையில் 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகலில் 1.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் கம்ப்யூட்டர் வழித் தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் லாக்கின், பாஸ்வேர்டு பயன்படுத்தி www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பயிற்சி பெறலாம். பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் மாவட்டம், நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்விற்கு 3 நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தைக் குறிப்பிட்டு இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நுழைவுச்சீட்டில் உள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும். தேர்வு மையம் மாற்றம் குறித்து எவ்வித விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரம்; மத உடைகளுக்கு தடை, சீருடைக்கு மட்டுமே அனுமதி- கர்நாடக அரசு உத்தரவு!