நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோழிக்கரை, குரும்பாடி, பர்லியாறு, புதுக்காடு போன்ற அடர்ந்த வனப்பகுதி மத்தியில் அதிக அளவு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் குன்னூர், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களையும்போல் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயில வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நகர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் ஆண்ட்ராய்டு போன், லேப்டாப் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் கல்வித் தரம் பாதிப்படையக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அடர்ந்த வனப்பகுதியான தங்கள் பகுதிகளில் நெட்வொர்க் இல்லாததால் தினந்தோறும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேஎன்ஆர் பகுதிக்குச் சென்று சாலையோரத்தில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவ்வழியே சென்று வரக்கூடிய வாகனங்களில் உதவி கேட்டும் குழந்தைகள் சென்று வருகின்றனர்.
இதனால் குழந்தைகளும் பெற்றோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து இவர்கள் கல்வி பயில்வதை எளிமையாக்க வேண்டும் என்பதே பர்லியாறு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க...வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதான பிக்பாஸ் போட்டியாளர்!