சென்னை: மிக்ஜாம் (Michaung) புயலினால் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிலவேம்பு குடிநீர் மற்றும் நிலவேம்பு பொடி பாக்கெட்கள், 50 ஆட்டோக்கள் மூலம் சென்னை முழுவதும் வழங்குவதற்கான நிகழ்வினை இன்று (டிச.12) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "இந்திய மருத்துவர்கள் மற்றும் கூட்டுறவு மருந்து செய் நிலையம் பண்டகசாலை என்பது இம்ப்காப்ஸ் (IMPCOPS) ஆகும். 1944ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் தொடங்கப்பட்ட இந்த இம்ப்காப்ஸ் என்கின்ற அமைப்பு, ஏறத்தாழ 17 ஆயிரத்து 500 பதிவு பெற்ற மருத்துவர்களைக் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய நிறுவனம்.
இதில், ஆயிரத்து 300 வகையான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் சார்பில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு உதவுகின்ற வகையில், 50 ஆட்டோக்களில் நிலவேம்பு குடிநீர் மற்றும் இலவச நிலவேம்பு பொடி பாக்கெட்டுகள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளம் அதிகம் பாதித்த தென் சென்னை பகுதிகளில், சைதாப்பேட்டை அடையாற்றங்கரை ஓரம், விருகம்பாக்கம் அடையாற்றங்கரை ஓரம், வேளச்சேரி அடையாற்றங்கரை ஓரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற குடியிருப்பு தாரர்களுக்கும் மற்றும் சோழிங்கநல்லூரில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட ஏரிகளிலிருந்து திறந்து விடப்பட்ட மழைநீரால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரனை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மதுரவாயல் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 50 ஆட்டோக்களின் மூலம் நிலவேம்பு குடிநீர், நிலவேம்பு பொடி பாக்கெட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில், தமிழ்நாட்டில் ஆயிரத்து 542 சித்த மருத்துவ மையங்கள் இருக்கின்றது. இதில், 772 ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், 770 வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என ஆக மொத்தம் ஆயிரத்து 542 மருத்துவமனைகளில் இந்த நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
அனைத்து மருத்துவமனைகளிலும் மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சேற்றுப்புண் போன்ற பல்வேறு உபாதைகளுக்குச் சித்த மருத்துவம் என்கின்ற வகையில் தாளிசாதி சூரணம், தாளிசாதி வடகம், தயிர்சுண்டி சூரணம், ஆடாதொடா மணப்பாகு, வங்க விரண களிம்பு ஆகிய மருந்துகள், அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடங்கப்பட்ட நாள்முதல், தற்போது அதன் செயல்பாடுகள் என்பது அனைவராலும் கூர்ந்து கவனிக்கும் ஒன்றாக இருக்கிறது. அந்த அமைப்பின் சார்பில், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தடுக்கும் சேவைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மத்திய அரசின் சார்பில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்திற்கு ‘Best Performing State’ என்கின்ற விருதை மத்திய அரசு அறிவித்து வழங்கியிருக்கிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பிலிருந்த சென்னையை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர்கள் - ஊக்கத்தொகை வழங்கிய மு.க.ஸ்டாலின்...